அருள்மிகு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோவில், இலண்டன்

LONDON  RAJA RAJESHWARI  TEMPLE  PHOTOS  AND THE ARTICLE

இங்கிலாந்தில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை
அருள்மிகு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோவில்
பெருமான்    :   அண்ணாமலையார்
அம்பாள்     :   உண்ணாமுலை அம்மன்
இடம்       : எண் 4, டெல் சந்து, சரே-KT17 2NE  ஸ்ரோன்லி, UK

100_0977சர்வலோக நாயகியாகிய அன்னை பராசக்தி இராஜராஜேஸ்வரி அம்பாள் இலண்டனில் ஸ்ரோன்லி பதியில் இருந்து பக்தர்களை அருள்பாலிக்கின்றாள் என்று கேட்கும் போது உண்மையிலேயே வியப்பு அடைந்தேன். ஸ்ரோன்லி என்பது இலண்டனில் உள்ள வாலிங்டனிலிருந்து சுமார் 10 கி.மீ.தூத்திலும், கிராய்டனிலிருந்து சுமார் 15 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ள பகுதியாகும். இந்தியாவில் இருந்து கடல் கடந்து வந்து, இந்து மதத்தின் வளர்சியினை முன்னிறுத்தி செயல்படும் இலண்டன் வாழ் இந்திய மக்களை நினைத்து என் மனம் மகிழ்ச்சி அடைகின்றது.

இத்தலத்தில் உண்ணாமுலை அம்மன் சமேத எம்பெருமான் அண்ணாமலையார் அருள்பாலித்தாலும், முக்கிய மூலவர் சன்னதியில் அன்னை பராசக்தி அருள்பாலிக்கின்றாள். அம்பாளின் சன்னதிக்கு இருபுறமும் முறையே வினாயகரும் முருகனும் தனித்தனி சன்னதியிலிருந்து பக்தர்களை அருள்பாலிக்கின்றனர்.

திருத்தலத்தில் நுழைந்தவுடன் இடதுபுறம் தட்சிணாமூர்த்தியும் அவருக்கு அடுத்து எம்பெருமான் அண்ணமலையார், உண்ணாமுலை அம்மன் இருப்பதனைக் கண்டு வணங்கிடலாம். இடப்புறத்தில் நாம் கண்டு வணங்க இருப்பது அருள்மிகு தெய்வங்கள் இரங்கநாத பெருமாள், ஸ்ரீபிரம்மா, ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவியாவர்.

இதற்கு அடுத்து நாம் வணங்க இருக்கும் அருள்மிகு தெய்வங்கள்  ஸ்ரீவெங்கடேஸ்வரர் பத்மாவதி தாயார் ஆகும்.  இந்த தெய்வங்களை கண்டு வணங்கிய பின் தலத்தின் உள்வளாகத்தில் நுழைந்ததும் கொடி பீடத்தையும் அதன் அருகல் உள்ள வினாயகரையும் வணங்கிடலாம்.  கொடி மரத்திற்கு வலது புறத்தில் உள்ள சுவற்றில் மாடம் போல் அமைந்துள்ள முதல் சன்னதியில் ஸ்ரீகணபதி, திருச்செந்தூர் முருகனையும் இரண்டாம் சன்னதியில் உமா மகேஸ்வரர், ஸ்ரீநடேசர், சிவகாமி ஆகிய அருள்மிகு தெய்வங்களையும் வழிபடலாம்.

அம்பாளை வழிபட்டு விட்டு வலம் வரும் போது நாம் வணங்க வேண்டிய அருள்மிகு தெய்வங்கள் ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீதாலீஜீகா,ஸ்ரீசண்டிகேஸ்வரி, ஸ்ரீதுர்கை ஸ்ரீஇலட்சுமி ஆகும். இடப்புறத்தில் சுவரில் அமைந்துள்ள மாடம் போன்ற சன்னதிகளில் பிராம்மி, மகேஸ்வரி, சௌமாரி,வராஹி, மாஹேந்தரி, சாமுண்டா, மகாலட்சுமி ஆகிய அருள்மிகு தெய்வங்களையும், அதற்கு அடுத்த சன்னதியில் நவக்கிரகங்களையும் கண்டு வழிபடலாம்.

இத்திருத்தலத்தில் பங்குனி உத்திரம், மகாசிவராத்திரி, சங்கடஹரசதுர்த்தி மாசி மகம், அபிராமி பட்டர் விழா, கார்த்திகை தீபம், பொங்கல், திருவெம்பாவை திருவிழா, அய்யப்ப மண்டல பூஜை, சண்டிஹோமம் நவராத்திரி போன்ற விழாக்கள் மிக சிறப்பாக நடத்தப்படுகின்றன.

Annamalayarஇத்தலத்திற்கு சென்றிருந்த தினம் சங்சடஹர சதுர்த்தி மிக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அன்னதானம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இத்தலத்தின் வருடாந்திர பிரமோற்சவம் 08.05.2016 அன்று நடைபெறுவதற்கான அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றேன். அத்தருணத்தில் கணபதி ஹோமம், கொடியேற்றம், தேர்த் திருவிழா, புனித நீர் விழா, பூங்கவனம் மற்றும் பைரவர் திருவிழா, வசந்த மண்டப பூஜை போன்ற வைபவங்கள் மிக சிறப்பாக இத்தலத்தின் தர்மகர்த்தா குழுவினரின் முன்னிலையில் நடைபெறவிருக்கின்றன.

இத்தலத்திற்கு வாய்ப்பு கிடைக்கும் மெய்யன்பர்கள் அவசியம் வந்து எம்பெருமானைத் தரிசிப்பதோடு மற்ற தெய்வங்களையும் கண்டு வணங்கிட வேண்டும். அவன் அருளாளே எதுவும் நடப்பது சாத்தியம் அன்றோ?  இத்தலத்திற்கு வரும் மெய்யன்பர்களின் துயர் நிச்சயம் களையப்படுவதுடன் மன அமைதியும் கிட்டும் என்று உறுதியாகக் கூறலாம்.  இத்தருணத்தில் எனது நினைவுக்கு வருவது   அபிராமி அந்தாதி பாடலேயாகும். மெய்யன்பர்களும் அறிந்து கொள்ளும் நோக்கத்தில் அப்பாடலை இங்கு பதிவு செய்கிறேன்.

‘ஆத்தாளை எங்கள் அபிராமி
வல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூநிறத்
தாளைப் புவி அடங்கக்
காத்தாளை அங்குச பாசாங்
குசமும் கரும்பும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியை தொழு
வார்(கு) ஒரு தீங்கில்லையே.’

அபிராமிவல்லி எங்கள் தாய். எல்லா அண்டங்களையும் பெற்றெடுத்தவள். மாதுளம் பூப்போன்ற  நிறமுடையவள். உலகமெல்லாம் காப்பவள் அழகிய கைகளில் பஞ்ச பாணங்களையும், பாசத்தையும் அங்குசத்தையும், கரும்பு வில்லையையும் வைத்திருப்பவள் மூன்று கண்களையுடையவள். அந்த அம்பிகையை தொழுபவருக்கு ஒரு தீங்கும் உண்டாகாது என்பது இந்தப் பாடலின் பொருள்.

இத்திருத்தலத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் சிவபுரம் என்ற அமைப்பின் மூலம் பன்னிரு திருமுறைகள் பண்ணுடன் ஓதும் பயிற்சியும், யோகா, சங்கீதம், நடனம்  போன்ற வகுப்புகளும் நடைபெறுகின்றன என்பதனை அறியும் போது மிகவும் மகிழ்ச்சியினை தருகின்றது. நமது பாரம்பரியம் காக்கப்படுகின்றது என்பதற்கு இதைவிட வேறு ஒன்றும் இல்லை என்று கூறலாம். இது தவிர்த்து தமிழ் ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மனி போன்ற மொழிகளும், கணிதம், அறிவியல் போன்ற பாடங்களும் நடத்தப்படுவது பெரிதும் பாராட்டுவதற்குரிய செயல்களாகும். மேலும் தலம் பற்றிய தகவல்கள் அறிந்து கொள்ள அணுக வேண்டிய தொலைபேசி எண் 020 8393 8147.

 

ponrajச.பொன்ராஜ்,

7ஃ497 ‘டி’ பகுதி,சிட்கோநகா; 58வது தெரு, வில்லிவாக்கம் சென்னை-600 049
ponpuni2002@gmail.com
கையகப் பேசி – 9962040695
தொலைபேசி – 26171965