சிதம்பரம் ஸ்ரீ நடராஜர், முக்குறுணிப் பிள்ளையார் ஆலய மஹா கும்பாபிஷேகம்

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தில் அமைந்திருக்கும்,
முக்குறுணிப் பிள்ளையார் ஆலய மஹா கும்பாபிஷேகம்

02.02.2017 * வியாழன் * காலை * 08.00 மணிக்கு மேல் 08.45 மணிக்குள்.

mukurniசிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய வளாகத்தினுள் அமைந்து, வேண்டுவோருக்கு
வேண்டுவனவற்றை அளித்து அருள்பாலித்து வரும், பெரும் உருவத்தில் அமைந்த,
பேரருளை வாரி வழங்கும், ஸ்ரீ முக்குறுணி விநாயகர் ஆலயத்தில், தற்காலம்
கோயிலை வலம் வர வசதியாக பெரிய மண்டபம் – முழுவதும் கற்றளியாக, கருங்கல்
திருப்பணியாக பெரும் வேலைகள் நடைபெற்று, சிற்ப சாஸ்திர முறைப்படி,
கோபுரங்களுக்கு பஞ்சவர்ணங்கள் தீட்டி, ஓவியங்களுக்கு மெருகூட்டி, அழகிய
பொலிவு கொண்ட இவ்வாலயத்திற்கு, மஹா கும்பாபிஷேகம், ஸ்ரீ ஸபாநாயகர் கோயில்
பொது தீக்‌ஷிதர்களின் சீரிய வழிகாட்டுதலின் படியும், பூரண வைதீக நெறி
முறைப்படியும்,

mukkurruni1நிகழும் துர்முகி வருஷம், தை மாதம் 20ம் தேதி, வியாழக்கிழமை, 02.02.2017,
காலை 08.00 மணிக்கு மேல் 08.45 மணிக்குள் மிகச் சிறப்பாக நடைபெறும்.

பக்தர்கள் அனைவரும் காணுதற்கரிய இந்த மாபெரும் நிகழ்வை தரிசித்து, ஸகல
நலங்களும், வளங்களும் பெற்று உய்ய வேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம்.

யாகசாலை நிகழ்ச்சி நிரல் :
மிக பிரம்மாண்டமான அளவில் அமைந்த, தனித்துவம் வாய்ந்த சிதம்பர பூஜை
முறைப்படி அமைக்கப்பட்ட 16 யாக குண்டங்கள் கொண்ட (நவ (9) குண்டபக்‌ஷம்,
பஞ்சகுண்ட (5) பக்‌ஷம், தனித்த யாக குண்டங்கள் – 2) அற்புதத் தோற்றத்தில்
அமைந்த யாகசாலையில், எட்டு கால யாக பூஜைகள், கீழ்க்கண்ட நிரலின்படி
நிகழ்ச்சிகள் நடைபெறும்.

26.01.2017 – வியாழன் – காலை : ஸ்ரீ நடராஜர்
அனுக்ஞை. கூஷ்மாண்ட ஹோமம், நாந்தி பூஜை,

27.01.2017 – வெள்ளிக் கிழமை
காலை – மஹா கணபதி ஹோமம்.
மாலை – தனபூஜை
28.01.2017 – சனிக் கிழமை
காலை – நவக்ரஹ ஹோமம்
மாலை – வாஸ்து சாந்தி ஹோமம்
29.01.2017 – ஞாயிற்றுக் கிழமை
காலை – கடாகர்ஷனம் கலச பூஜை, ந்யாஸ அர்ச்சனை
மாலை – அஷ்டபந்தன ஸம்ஸ்காரம், முதலாவது
கால யாக பூஜை
30.01.2017 – திங்கட் கிழமை
காலை – இரண்டாம் கால யாக பூஜை, ஸ்ரீ வித்யா
ஹோமம்,
மாலை – மூன்றாம் கால யாக பூஜை,
கணபதி ஸஹஸ்ரநாம ஹோமம்
31.01.2017 – செவ்வாய்க் கிழமை
காலை – நான்காம் கால யாக பூஜை, கணபதி
உபநிஷத் தச (10) திரவிய ஹோமம்
மாலை – ஐந்தாம் கால யாக பூஜை,
வஸோர்த்தாரா ஹோமம்,
01.02.2017 – புதன் கிழமை
காலை – ஆறாம் கால யாக பூஜை,
ககார கணபதி ஸஹஸ்ரநாம ஹோமம்.
மாலை – ஏழாம் கால யாக பூஜை, ஸ்பர்சாஹுதி
ஹோமம்,
இரவு – எட்டாம் கால யாகம்

02.02.2017 – வியாழன் – அதிகாலை முதல் – கோபூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை,
புனித நீர்க்குடங்கள் புறப்பாடு,
காலை 08.00 மணிக்கு மேல் 08.45 மணிக்குள், ரேவதி நக்‌ஷத்திரம், மீன
லக்னம், சித்த யோகம் கூடிய சுபயோக சுபவேளையில் ஸ்ரீ முக்குறுணி
விநாயகருக்கு மஹா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறும்.

இதே நேரத்தில், தெற்கு கோபுரத்தில் அமைந்து, வளம் பல தரும், மிகச்
சிறப்பு வாய்ந்த, மிக அரிதான வடிவமாகிய, வடக்கு நோக்கி அமர்ந்த
சுப்ரமண்யர் ஆலயத்திற்கும், முக்குறுணி விநாயகருக்கு நேர்
எதிர்ப்புறத்திலும், தெற்கு கோபுரத்திற்கு அருகாமையில் இருக்கும்
ஸ்ரீநர்த்தன விநாயகர் ஸ்ரீ மேதாதக்‌ஷிணாமூர்த்தி ஆலயத்திற்கும்
மிகவும் சிறப்பான முறையில் மஹா கும்பாபிஷேகம் நடைபெறும்.

02.02.2017 – மாலை – முக்குறுணி அரிசி கொண்டு (சுமார் 18 கிலோ)
தயாரிக்கப்பட்ட, ஒரே பிரம்மாண்ட மோதகம் நிவேதனம்.

இரவு – ஸ்வாமி வீதியுலா.

கும்பாபிஷேக யாக காலங்களில், நான்கு வேத பாராயணங்களும், தமிழ்த்
திருமுறைகளும், இன்னிசை நாதஸ்வரக் கச்சேரியும் மிக சிறப்பாக நடந்தேறும்.
கால யாக பூஜைகளின் முடிவில் பிரஸாத விநியோகம் மற்றும் அன்னதான நிகழ்வுகள்
நடைபெறும்.

03.02.2017 – முதல் மண்டலாபிஷேக பூஜைகள் தொடக்கம்.

முன்நின்று அருளும் முக்குறுணி விநாயகர் :
சிதம்பரம் பெரிய பிள்ளையார்

ஸ்ரீ விநாயக மூர்த்தி :
அங்கிங்கெணாதபடி எங்கும் பிரகாசமாய் வியாபித்திருக்கும் ஓம் எனும் ஓங்கார
வடிவமாக விளங்குபவர் ஸ்ரீ விநாயகப் பெருமான். யானை முகமும், மனித உடலும்,
நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே
வடிவாக அமைந்தவர் ஸ்ரீ விநாயகப் பெருமான்.

மிகவும் எளிமையான கடவுள் கணபதி. வேண்டுவோருக்கு வேண்டுவன அருளக்கூடியவர்.
வேதங்கள் போற்றும் வேழமுகத்தோன். அனைவருக்கும் அருள்பாலிக்கும்
ஆனைமுகத்தோன். ஸ்ரீ விநாயகரே முழு முதற்கடவுள் என்று வழிபாடு செய்வது
காணாபத்தியம் எனும் வழிபாட்டு முறையாகும்.

முன் நிற்கும் முதற்கடவுள் :
எந்தவொரு சைவ ஆலயங்களிலும் விநாயகருக்கு என்றே தனி இடம் உண்டு. அவரை
வழிபட்ட பின்பு தான் மற்ற கடவுளரை வழிபடவேண்டும் என்ற வழக்கமும் உள்ளது.

உலகெங்கிலும் உள்ள ஆலயங்களில் பல்வேறு விதமான வடிவங்களில், எண்ணிலடங்கா
நிலைகளில் விநாயகர் அருள்பாலிக்கின்றார்.

அதில், மிகவும் பிரசித்தி பெற்ற, வரங்களை உடன் வாரி வழங்கக் கூடிய,
தோற்றத்தினைப் போல பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் விதத்திலும் பெரியோனாக
விளங்கும், சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய பெரிய பிள்ளையார் என்று
போற்றப்படும் முக்குறுணி விநாயகர் ஆலயம் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

முக்குறுணி விநாயகர் :

சிதம்பரம் நடராஜர் கோயிலின் ராஜ கோபுரம் என போற்றக்கூடிய தெற்கு கோபுர
வாயிலைத் தாண்டினோமானால், இடது பக்கம் தனியொரு அழகிய ஆலயம் கொண்டு ஸ்ரீ
முக்குறுணி விநாயகர் அமர்ந்து அருள்பாலிக்கின்றார்.

தெற்கு கோபுரத்திலிருந்து தரிசிக்க இருக்கும் முதலாமவர் என்பதால், பெரிய
பிள்ளையாரான இவரை முகக்கட்டணத்து விநாயகர் என்று
போற்றியிருக்கின்றார்கள்.

முகப்பு மண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்பக்ருஹம் என்ற அழகியதொரு
வரிசையில் ஆலயம் தனியாக அமைந்துள்ளது.

முகப்பு மண்டபத்தின் விதானத்தில் – மேற்கூரையில், விநாயகரின் 16
வடிவங்கள் (ஷோடச கணபதிகள்) எழில் கொஞ்ச வரையப்பட்டுள்ளன.
எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் வண்ணம், நெடிதுயர்ந்த தோற்றம்,
பெயருக்கேற்றார் போல் பெருத்த வடிவம், அழகியல் கொஞ்சும், பார்த்தவுடன்
கண்களில் ஒற்றிக் கொள்ளும் விதத்தில், மூர்த்தியும் பெரிது, கீர்த்தியும்
பெரிது என்ற வாக்கியத்திற்கு ஏற்றாற்போல் அமைந்த ஸ்ரீ முக்குறுணி
விநாயகர் அருளே வடிவமாகக் காட்சி அளிக்கின்றார்.

பெரியதொரு தோற்றத்திற்கு ஸகல திரவிய அபிஷேகக் காட்சி ஆனந்தத்தை அளித்து,
அளவில்லா பேறுகளை அள்ளித்தரும்.

அர்த்த மண்டபத்தின் தூணில், கல்வெட்டாக விநாயகர் அகவல் அமைந்திருப்பது,
பக்தர்கள் அனைவரும் படித்துப் பயன் பெற வசதியாக இருக்கும்.
அர்த்த மண்டபத்தின் வாசலை விட பிள்ளையார் பெரியதாக இருப்பதால், விநாயகரை
அமைத்து விட்டுப் பிறகு வாசல் படி அமைத்திருப்பார்களோ என தோன்றச்
செய்யும்.
குறுணி – மூன்று குறுணி – முக்குறுணி :
பழந்தமிழர் அளவை அலகுகளில் குறுணி என்பதற்கு தற்காலம் நான்கு படி அல்லது
6 கிலோவுக்கு சமமானது. விசேஷ காலங்களிலும், வேண்டுதலுக்காகவும் – மூன்று
குறுணி அல்லது முக்குறுணி அளவு, அதாவது பதினெட்டு கிலோ அரிசிமாவினால் –
ஒரே பெரிய கொழுக்கட்டை பிடிக்கும் வழக்கம் இருப்பதாலும், 12 படி அரிசி
அன்னத்தினை நிவேதனம் செய்யும் வழமையாலும் – இந்தப் பெரிய பிள்ளையாருக்கு
முக்குறுணி விநாயகர் என்ற பெயர் வந்தமையை அறிய முடிகின்றது.

பனிரண்டு படி அரிசி சாப்பிடுபவரின் வயிறு போன்றதொரு சரியான அளவில்
விநாயகர் அமைந்திருப்பதாக சிற்பி ஒருவர் சிறப்பாகக் கூறுவார்.

மூன்று என்ற எண்ணுக்கும் முக்குறுணி விநாயகருக்கும் அநேக தொடர்புகள்
உண்டு. முகப்பு வாசல் மூன்று. விநாயகரின் மேலே அமைந்திருக்கும்
விமானத்திற்கு கலசங்கள் மூன்று. பிரம்ம விஷ்ணு ஈசன் எனும்
மும்மூர்த்திகளின் அம்சமாக அமைந்தவர். படைக்கப்படும் குறுணியின் அளவு
மூன்று.

சிதம்பர (வி)நாயகர் :
சிதம்பர பூஜை பத்ததியின் படி, முக்குறுணி விநாயகர் ‘த்ரிசிவாக்ய கணபதி’
என்று போற்றப்பட்டு வழிபடப்படுகின்றார். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற
மும்மூர்த்திகளின் அம்சமாக இந்த விநாயகர் விளங்குவதால், இவரே படைத்தல்,
காத்தல், அழித்தல் எனும் முத்தொழிலுக்கும் வித்தகனாகின்றார். விநாயகர்
அகவல் போற்றுவது போல, மும்மதச் சுவடு – சைவத்தின் திருநீறு, சாக்தத்தின்
குங்குமம், காணாபத்யத்தின் நம்பிக்கை தரும் தும்பிக்கை எனும் மூன்று மத
அடையாளங்களைக் கொண்டவர்.

விடல் தேங்காய் வழிபாடு :
தொடங்கிய காரியத்தை தொய்வில்லாமல் நடக்க அருள்பவர் என்பதால், சிதம்பரம்
கோயிலின் முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் இங்கு செய்யப்படும் கணபதி ஹோமம்
தான் ஆரம்பம்.

இங்கு விடல் தேங்காய் வழிபாடு சிறப்புக்குரியது. செயல்கள் சிறக்கவும்,
வேண்டிய காரியம் நிறைவேறினாலும் – பக்தர்கள் இங்கு 1008 தேங்காய்களை
விடல் தேங்காயாக உடைக்கும் வழக்கம் இன்றளவும் நடைபெற்றுக்
கொண்டிருக்கின்றது.

ஆலய இருப்பிட வரலாறு :
பொதுவாக சிவ ஆலயங்களில், விநாயகர் மற்றும் முருகர் கோயில்கள் சிவ
பெருமானுக்கு இரு புறமும் அமைந்திருக்கும். அது, கோஷ்டத்திலோ அல்லது
தனிக்கோயிலாகவோ அமையலாம். விநாயகர், பிரகாரம், முருகர் என வலம் வந்து
சிவனை வழிபட்டால் அது மஹா பிரணவ பிரகாரம் என்பதாகும்.

அதன்படி, சிதம்பரத்தின் ஆதி மூலவராகிய, ஸ்ரீ மூலநாதர் எனும் கிழக்கு
நோக்கிய தெய்வத்திற்கு, இரு மருங்கும் விநாயகரும், பாண்டிய நாயகர்
கோயிலில் உறையும் முருகப் பெருமானும் அமைந்திருக்கின்றார்கள்.

வரலாற்றுக் குறிப்புகள் :
முக்குறுணி விநாயகரைப் பற்றி வரலாற்றுக் குறிப்புகள் நேரடியாகக்
கிடைக்கவில்லை. வரலாற்று ஆய்வாளர்கள் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்றாம்
குலோத்துங்கன் (கி.பி. 1178 – 1218) காலத்தினதாக இருக்கும் என
நம்புகின்றார்கள்.

தெற்கு திசையில் அமைந்த பிரம்மாண்ட விநாயகரைப் போலவே, வடக்கு திசையில்
பிரம்மாண்ட – ஒரே கல்லினால் ஆன – பிரம்மாண்ட முருகர் – பாண்டிய நாயகர்
சன்னிதி – மூன்றாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் கட்டப்பட்டது என
ஆய்வாளர்கள் அறுதியிடுகின்றார்கள். இந்த மூன்றாம் குலோத்துங்கன் தான்,
நடராஜர் அமைந்திருக்கும் கருவறைக்கு நேரெதிரே நிருத்த சபை எனும் பெரு
மண்டபத்தைக் கட்டினான். இது தேர் வடிவில் இருக்கும். அதே போல பாண்டிய
நாயகர் முருகர் கோயிலும் தேர் வடிவில் அமைந்திருப்பதை ஆய்வாளர்கள்
சுட்டுகின்றார்கள்.
முக்குறுணி விநாயகர் ஆலய அமைப்பு பிற்காலச் சோழர்களின் கட்டிடக் கலையையே
சார்ந்திருப்பதை பலரும் நிரூபித்திருக்கின்றார்கள்.

பொதுவாக பெரிய பிள்ளையார் சிலைகள் தென் தமிழகத்திலேயே காணப்படுகின்றன.
பிள்ளையார்ப்பட்டி – குடைவரை கோயில் ஏறத்தாழ 1600 ஆண்டுகள் பழமையானது
என்கின்றார்கள்.
மூன்றாம் குலோத்துங்கன் பாண்டி நாடு வரை சென்று படையெடுத்து வென்றதன்
நினைவாக – தென் தமிழகமான பாண்டி நாட்டில் உள்ள (மதுரை, திருநெல்வேலி)
பெரிய பிள்ளையாரைப் போன்றதொரு சிலையை சோழ நாட்டில் நிறுவ
எண்ணியிருக்கலாம்.
அதன் விளைவே, சிதம்பரத்தில் பெரிய பிள்ளையார் நமக்குக் காட்சி
அளிக்கின்றார். சோழ சாம்ராஜ்யம் நலிவடைந்த பின் வந்த பாண்டிய மன்னர்களும்
சிதம்பரத்திற்கு பெரும் தொண்டு ஆற்றியிருக்கின்றார்கள். ஆகவே, அவர்களும்
இவ்வாலயங்களுக்கு தொண்டினைத் தொடர்ந்திருக்கலாம்.

வழிபடுவதால் வரும் வளம் :

சிதம்பரம் ஸ்ரீ முக்குறுணி விநாயகரை வழிபட்டு,

பிரம்ம, விஷ்ணு, சிவ மூர்த்திகளின் பரிபூரண கிருபையைப் பெற்று,
ஆணவம், கண்மம், மாயை எனும் மலங்கள் அறுபட்டு,
சூரியன், சந்திரன், அக்னி ஆகியோரைக் கண்களாகக் கொண்டதால், நவக்ரஹ
தோஷங்கள் நீங்கப்பெற்று,
வாதம், பித்தம், கபம் எனும் நோய்கள் விலகப்பெற்று,
மனம், வாக்கு, காயம் எனும் முப்பொறிகளிலும் தூய்மை பெற்று,
உம்மை, இம்மை, மறுமை எனும் மூன்றிலும் புண்ணியம் பெற்று,
தூல, தூக்கும, காரண வடிவினராய் வழிபட்டு வரம் பெற்று,
யந்திரம், மந்திரம், தந்திரம் ஆகிய மூன்று ஸாதனை முறைகளாலும் திருப்தி
பெறுபவர் என்பதனால்,
ஸத், சித், ஆனந்தம் – எனும் மூன்று பரமானந்த சக்திகளைப் பெற்று

வாழ்வாங்கு வாழ்ந்து, பெரிய பிள்ளையார் அருளும் பெரும் அருளும்,
செல்வங்களும் பெற்று, பெரிய பேறு பெறுவோமாக !

Leave a Reply

Your email address will not be published.