திருமணத்தடை நீக்கும் – மணம் தவிழ்ந்த புத்தூர

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்திலுள்ள மணம் தவிழ்ந்த புத்தூரில் மீனாட்சி உடனுறை சொக்கநாதீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. எல்லா சிவன் கோவில்களிலும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் முக்கியமான நால்வராகிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் இவர்களுடைய திருஉருவச் சிலைகள் கட்டாயம் இருக்கும். இதைக் குறிப்பிடும் வகையில் பாலை, வேலை, ஓலை, காலை என்று குறிப்பிடும் நான்கு புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன.

சுந்தரர் மணமுடிக்கும்போது சிவபெருமான் அவரை தடுத்து அடிமை சாசன ஓலையை கொடுத்து அழைத்துச் செல்லும் ஸ்தலம் “ஓலை” என நாட்டு வழக்கில் இருந்ததாக் சொல்வர். எனவே ஓலை சம்பந்தப்பட்டது மணம் தவிழ்ந்த புத்தூர்.

இந்த ஊர் “புத்தூர்” என்று மட்டும் முன் காலத்தில் அழைக்கப்பட்டது. சுந்தரரருடைய திருமணத்தைத் தடுத்து அவரை ஆட்கொண்ட தால் மணம் தவிர்த்த புத்தூர் என்றும், பின்னர் அது மருவி மணம் தவிழ்ந்த புத்தூர் என வழங்கப்படுகிறது. எல்லா சிவன் கோவில் களிலும் பெரும்பாலும் கிழக்கு பார்த்த அமைப்பில்தான் ஆவுடையார் வீற்று இருப்பார். குறிப்பிட்ட சில சன்னதிகளில் மட்டும் மேற்கு பார்த்த அமைப்பிலும் ஆவுடையார் காணப்படுகிறார். அதில் மணம் தவிழ்ந்தபுத்தூரும் ஒன்று. இக்கோவிலின் மூலவர் சொக்கநாதீஸ்வரர், தாயார் மீனாட்சி அம்பாள்.

ஆவுடையார் சன்னதிக்கு மேலே சுந்தரரை மணம் தடுத்த கோலம் சிலை வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆவுடையாருக்கு முன்புறம் நந்தியும், நந்தியின் பின்புறம் பலிபீடமும் உள்ளது. முக்கியமாக அகஸ்தியர் வழிபட்ட ஸ்தலமாகும் இது. இந்த திருக்கோவிலின் பெருமைகளை பார்க்கலாம்.

சடைய நாயனார், இசைஞானியார் தம்பதிக்கு திருநாவலூரில் பிறந்தவராவார் சுந்தரர். இவருக்கு தந்தையிட்ட பெயர் நம்பி ஆரூரன் அந்நாட்டு மன்னரான நரசிங்க முனையரையர் சுந்தரரின் சிறு வயது அழகை பார்த்து அவர்களுடைய பெற்றோர்களின் அனுமதியுடன் தத்தெடுத்து தானே வளர்த்து வந்தார். சுந்தரரின் பதினாறாவது வயதில், அவருக்குத் திருமணம் நடத்திட நினைத்த மன்னர் இன்றைய பண்ருட்டியை அடுத்த புத்தூரில் வாழ்ந்திருந்த சடங்கவி என்ற சிவாச்சாரியாரின் மகளான கமலஞானப் பூங்கோதையினைத் தேர்வு செய்து நிச்சயம் செய்தார்.

திருமணச் சடங்குகள் நடந்து கொண்டிருந்த போது, முதியவர் ஒருவர் சுந்தரரின் திரு மணத்தை தடுத்து நிறுத்தினார். அவர் சுந்தரரை பார்த்து, “அப்பனே! நீ எனது அடமை! உன் தகப்பன், பாட்டன் எல்லோரும் எனக்கு அடிமை! என் அனுமதியின்றி நீ மணம் முடிக்க முயன்றது குற்றமாகும்!” என்றார். அதற்கு சுந்தரர், “நான் அடிமை என்பதற்கு அத்தாட்சி என்ன?” என்று கேட்க, “இதோ உன் பாட்டன் எனக்கு எழுதிக் கொடுத்த அடிமை ஓலை எனக்கூறி ஓர் ஓலையை நீட்டினார் முதியவர். அதைப் படித்துக் கூடப் பார்க்காமல் கிழித்து, அக்கினியில் இட்டுப் பொசுக்கினார் சுந்தரர்.

முதியவருக்கும், சுந்தரருக்கும் வழக்கு மூண்டது. “இங்கே எனக்கு நீதி கிடைக்காது. எனது ஊரான திருவெண்ணெய் நல்லூருக்கு செல்வோம் வா! அங்கு வழக்காடு மன்றத்தில் மறையோர்கள் முன்னிலையில் உண்மையை நிரூபிக்கிறேன்” என்று கூறினார் முதியவர்.

அதற்கு சுந்தரரோ, “அப்படியோர் வழக்கு இருக்குமெனில் அதை முடித்த பின்னரே மணம் முடிப்பேன்” எனச் சபதம் இட்டு முதியவருடன் சென்றார். பிறகு இந்த வழக்கு திருவெண்ணெய் நல்லூரில் நடந்தது. இதனால்தான் “தீராத வழக்குக்கு திருவெண் ணெய் நல்லூர் தீர்ப்பு” என்று சொல்லும் பழஞ்சொல் ஒன்று உண்டானது போல!

சுந்தரருடன் மணம் முறிந்த நிலையில் கமலஞானப் பூங்கோதை வழக்கு நடந்த இடத்திற்கு சென்று இறைவனிடம் முறை யிட்டார். ஈசன் அவருக்கு காட்சியளித்து கமலஞானப் பூங்கோதையை அவர் பிறந்த ஊரான இங்கு வந்து தவம் இயற்றி என் திருவடியை வந்து சேர் எனக் கூறினார். அந்த அம்மையாரும் திரும்பி இந்த ஸ்தலத்திற்கு வந்து இறைவனுடைய திருவடியை அடைந்தார். பின்னர் சிவனருளால் அவரை திருமணம் செய்து கொண்டாராம் சுந்தரர்.

திருக்கோவிலின் உள்ளே நுழைந்த உடன் இருப்பது வரசித்தி விநாயகர் சன்னதி. ஆலயத்தின் இடப்பக்கம் இருக்கும் சுப்பிரமணியர் சன்னதி. இவர் வள்ளி தெய்வயானையுடன் காட்சி தருகிறார். இங்குள்ள நவக்கிரக சன்னதியில் சனிபகவானுக்கு மட்டும் தனியாக சிலை வைத்து முதன்மைப்படுத்தி இருக்கின்றனர். இந்த திருவீதியில் ஒரு விநாயகர் சன்னதி உள்ளது. வழக்கமாக எல்லா கோயில்களிலும் கிழக்கு பார்த்த அமைப்பில் விநாயகர் இருப்பார். ஆனால், இங்கு சிவன் தடுத்தாண்டு சுந்தரரைக் கூட்டிச் செல்வதைப் பார்த்தவாறே இருப்பது போல விநாயகர் தெற்கு பார்த்த நிலையில் இருக்கிறார்.

இங்கு ஒரு திருக்குளம் இருந்ததாகவும் அதில்தான் மணம் முறிந்த உடன் வெறும் கையுடன் சென்ற சுந்தரர் வந்த தேர், குதிரை எல்லாம் சென்று மறைந்ததாகவும் சொல்லப்படுகிறது. இது ஒரு திருமணத்தடை பரிகார ஸ்தலமாகும். திருமணத்தில் ஏற்படும் தடைகள் நீங்கவும், திருமண வாழ்க்கை சிறப்பாக அமையவும் இக்கோவிலில் சோமவாரத்தில் (திங்கள் கிழமைகளில்) பரிகார பூஜைகள் செய்யப்படுகிறது.

-நன்றி தினஇதழ்