சமயபுரம் மாரியம்மன் கோயில் வரலாறு

DSC_0114சக்தி திருத்தலங்களுள் குறிப்பிடத் தக்கது. தமிழகத்தில் உள்ள மாரியம்மன் திருத்தலங்களில் தலைமைத் தலமாக விளங்குவது.
கண்ணனூர், விக்கிரமபுரம், மாகாளிபுரம், கண்ணபுரம் ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படும் இந்தத் தலம், திருச்சிக்கு வடக்கில் சமயபுரத்தின் கண்ணனூர் அருகில் பெருவளை வாய்க்கால் கரையோரத்தில் மகாசக்தி பீடமாக விளங்குகிறது.
திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ள சமயபுரத் துக்கு நகரப் பேருந்துகள் அடிக்கடி உண்டு.
பழநிக்கு அடுத்து இரண்டாவதாக அதிக வருமானம் பெறும் தலம் சமயபுரம்.
உரிய காலத்தில் தேவையான& கேட்கும் வரம் தந்து காப்பவள் என்பதால், ‘சமயபுரத்தாள்’ என்பது இந்த அம்மனது அடைமொழி.
சோழ மன்னன் ஒருவன், தன் தங்கையைக் கங்க நாட்டு மன்னன் ஒருவனுக்கு மணம் முடித்து, அவர்களுக்குச் சீதனமாக ஒரு கோட்டையையும் நகரத்தையும் அளித்தான். அதுவே கண்ணனூர். பிற்காலத்தில் பாண்டியர் படையெடுப்பால் கோட்டையும் நகரமும் அழிந்தன. அந்த இடம் பின்னர் வேப்ப மரக் காடாயிற்று.
சமயபுரம் மாரியம்மன், ஆதியில் ‘வைஷ்ணவி’ என்ற நாமத்தில் ஸ்ரீரங்கத்தில் குடி கொண்டிருந்ததாகக் கூறுவர். இந்த அம்பாள், கோரைப் பற்கள் மற்றும் சிவந்த கண்களுடன் விளங்கியதால், அங்கு அப்போதிருந்த ஜீயர் சுவாமிகள், இந்த அம்மனை வேறோர் இடத்தில் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்தார்.
DSC_0010அதன்படி, சிலர் அந்தத் திருவுருவை எடுத்துக் கொண்டு வடக்கு நோக்கி கிளம்பினர். வழியில் ஓர் இடத்தில் இளைப்பாறினர் (அந்த இடம் தற்போது இனாம் சமயபுரம் எனப்படுகிறது!).
அவர்கள் கண்ணனூர் அரண்மனை மேட்டை அடைந்து, அம்பாள் திருவுருவை அங்கு ஓலைக் கொட் டகை ஒன்றில் வைத்து விட்டுச் சென்றனர். எனவே, அம்மன், ‘கண்ணனூர் அம்மன்’ என்றும், ‘கண்ணனூர் மாரியம்மன்’ என்றும் அழைக்கப்பட்டாள்.
இந்த நிலையில் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்த விஜயநகர மன்னர், தன் படைகளோடு கண்ணனூர் காட்டில் முகாமிட்டார். அப்போது அங்கிருந்த மாரியம்மனை வழிபட்ட மன்னர், போரில் வெற்றி பெற்றால், அம்மனுக்குக் கோயில் கட்டுவதாக வேண்டிக் கொண்டார். அதன்படியே அம்மனுக்குத் திருக்கோயில் கட்டிய விஜயநகர மன்னர், பரிவாரத் தெய்வங்களாக விநாயகரையும், கருப்பண்ணசாமியையும் பிரதிஷ்டை செய்து, குடமுழுக்கு விழா நடத்தி, நித்திய பூஜைக்கான ஏற்பாடுகளையும் செய்தார்.
தற்போதைய ஆலயம் கி.பி. 1804&ல் விஜயரங்க சொக்கநாத நாயக்க மன்னரால் கட்டப்பட்டது.
‘சோழர் காலத்திலேயே இங்கு மாரியம்மன் கோயில் இருந்திருக்க வேண்டும். இது பிந்தைய விஜய நகர மற்றும் நாயக்கர் மன்னர்கள் காலத்தில் சிறப்புப் பெற்றிருக்க வேண்டும்!’ என்பது ஆய்வாளர்களின் கருத்து.
சமயபுரம் கோயில் கொடி மரத்தை அடுத்துள்ள மண்டபத் தூண்களின் கீழ்ப் பகுதியில் நாயக்க மன்னர்களது உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள் ளன. எனவே, இந்தத் தலம் சுமார் 700 ஆண்டுகளுக்கு மேலாக சக்தித் தலங்களுள் ஒன்றாக விளங்குவதை அறியலாம்.
இந்த மாரியம்மன் கோயிலின் வடக்கே செல்லாயி அம்மன், போஜீஸ்வரன் மற்றும் கிழக்கே உஜ்ஜயினி மாகாளி முக்தீஸ்வரன் கோயிலும் இடம்பெற்றுள்ளன.
மாயனின் சகோதரியான சமயபுரத்தாள், திருவரங்கத்திலிருந்து வந்தவள் என்பதால், இந்தக் கோயிலின் நிர்வாகமும் பல நூற்றாண்டுகளாக திருவரங்கம் கோயில் வசமே இருந்தது. பக்தர்களது முயற்சியால், 1984&ஆம் ஆண்டு முதல் சமயபுரம் மாரியம்மன் கோயில், தனி நிர்வாகத்துக்கு மாறியது.
பக்தர்களிடம் வசூலித்த பணம் மூலம் கிருபானந்த வாரியார் இந்தக் கோயிலுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடத்தியுள்ளார்.
DSC_0156சமயபுரத்தாள் கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கு& மேற்காக சுமார் 280 அடி நீளத்துடனும் தெற்கு& வடக்காக 150 அடி அகலத்துடனும் அமைந்துள்ளது.
மூன்று திருச்சுற்றுகள் கொண்ட இந்தக் கோயில் முகப்பில் நீண்ட மண்டபம் ஒன்றுள்ளது. மூன்றாம் பிராகாரத்தில் பௌர்ணமி மண்டபம், நவராத்திரி மண்டபம், வசந்த மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. 2&ஆம் பிராகாரத்தில் விநாயகர், மாரியம்மனின் உற்சவ மூர்த்தி மற்றும் கருப்பண்ணசாமி ஆகியோரது சந்நிதிகள் உள்ளன.
இங்கு ஒரே சந்நிதியில் மூன்று விநாயகர்கள் அருள் புரிகிறார்கள். அன்றைய கோயில் நிர்வாகத்தினர், இங்குள்ள அம்பாளின் உக்கிரத்தை தணிக்க, என்ன செய்யலாம் என்று ஸ்ரீகாஞ்சி பெரியவரின் ஆலோசனையை வேண்டினர். அதன்படி நுழைவாயிலின் வலப் புறத்தில், ஒரே சந்நிதியில் ஞான சக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி வடிவங் களாக மூன்று விநாயகர்களை பிரதிஷ்டை செய்தனர். அதன்பின் அம்மனின் மூல விக்கிரகத்தில் கோரைப் பற்கள் அகற்றப்பட்டு, சாந்த சொரூபியாக மாற்றி 1970&ல் கும்பாபிஷேகம் செய்தனர்.
அம்பாளின் கருவறையைச் சுற்றி எப்போதும் நீர் நிறைந்திருக்கு மாறு ஈரத் தன்மையுடன் வைத்திருக் கிறார்கள். அம்பாள் எப்போதும் குளிர்ச்சியாக இருப்பதற்காக இந்த ஏற்பாடு.
DSC_0041சமயபுரத்தாளின் கருவறை மற்றும் கருவறை விமானம் தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளன. இந்தப் பணிக்காக பக்தர்கள் காணிக்கை வழங்கிய தங்கத்தின் எடை 71 கிலோ& 127 கிராம். இத்துடன் 3 கிலோ& 288 கிராம் செம்பு பயன் படுத்தப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு சுமார் ஏழு கோடி ரூபாய்.
உள்ளே அம்மன் சுகாசினியாகக் காட்சி தருகிறாள். அவளின் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படம் விரித்த நிலையில் காட்சி தருகிறது. இடக் காலை மடித்து வைத்துள்ளாள். கீழே தொங்க விட்டுள்ள வலக் காலின் கீழ் அசுரர்களது தலைகள் காணப்படுகின்றன. இவளின் எட்டுத் திருக்கரங்களில் முறையே கத்தி, கபாலம், சூலம், மணிமாலை, வில், அம்பு, உடுக்கை, பாசம் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள். நெற்றியில் திருநீறு மற்றும் குங்குமம். ஜொலிக்கும் தோடுகள், மூக்குத்தி ஆகிய அலங்காரத்துடன், 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி, 27 யந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டையில் இங்கு அருள் புரிகிறாள் சமயபுரத்தாள்.
சிவசக்தி சொரூபமாக வாழ்ந்த ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகாதேவியே, மாரியம்மனாக மாறினாள் என்பது கர்ண பரம்பரை கதை.
சிவபெருமான், மன்மதனை எரித்த வெப்பத்தின் அனல் தாங்காமல் தேவர்களும், மனித உயிர்களும் தவித்தனர். எனவே, அவர்கள் பார்வதியை வேண்டினர். அவள் அந்த வெப்பத்தை உள்வாங்கிக் கொண்டாள். அந்த சக்தி சொரூபமே சீதளாதேவி என்றும், மாரியம்மன் என்றும் வழங்கப்படுகிறது என்கிறார்கள்.
வசுதேவர்&தேவகி தம்பதியின் எட்டாவது குழந்தையான கண்ணன் யசோதை வீட்டுக்கும், நந்தகோபன்& யசோதையின் பெண் குழந்தை கம்சனது சிறைச்சாலைக்கும் இடம் மாற்றப்படுகின்றனர். அந்தப் பெண் குழந்தையை சிறைக்கு வந்து கம்சன் கொல்ல முயன்றபோது, அவனிடம் இருந்து தப்பித்து வானில் உயர்ந்து, ‘உன்னைக் கொல்லும் எமன் கோகுலத்தில் வளர்கிறான்!’ என்று கூறி மறைந்தது அந்த மாயக் குழந்தை. மாயாதேவி எனப்படும் அந்தக் குழந்தைதான் மாரியம்மன் என்கிறார்கள். அவளே சமயபுரத்திலும் அம்மனாக விளங்குகிறாள் என்பதும் ஐதீகம்.
இந்த மாரியம்மனுக்கு மகமாயி, அகிலாண்ட நாயகி, ஆயிரம் கண்ணுடையாள், சாம்பிராணி வாசகி, கௌமாரி, காரண சௌந்தரி, சீதளதேவி, கண்ணபுரத்தாள் ஆகிய பெயர்களும் உண்டு.
சமயபுரத்தாள் விக்கிரகம் மூலிகைகளால் ஆனதால், இதற்கு அபிஷேகம் கிடையாது. உற்சவர் அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம்.
கருவறையின் பின்புறம் அம்மனின் பாதங்கள் உள்ளன. இதற்கு மலர் சூடி, தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.
கோயிலின் முன் மண்டபத்தில் படுத்து உறங்குபவருக்கு அர்த்த ஜாமத்தில் அம்பாளின் கொலுசுச் சத்தம் கேட்கும் அதிசயம் இன்றும் நிகழ்கிறது. அம்மை நோய் தீர்க்கவும், நகர சாந்திக்காகவும் அம்பாள் இரவு நேரத்தில் வலம் வருவதாக ஐதீகம்.
காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்காக இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
சமயபுரம் கோயிலின் தல விருட்சம், மருத்துவ குணங்கள் நிறைந்த வேப்ப மரம்.
இங்குள்ள பெருவளை வாய்க்கால் சிறப்பு மிகுந்த தீர்த்தமாக விளங்குகிறது. ஆலயத்தின் மேற்கே அமைந்துள்ள திருக்குளம் மற்றொரு புண்ணிய தீர்த்தம். இதற்கு ‘மாரி தீர்த்தம்’ என்று பெயர்.
சமயபுரம் கோயிலில் சுமார் 20 லட்சம் ரூபாய் செலவில் செய்யப்பட்ட தங்க ரதம் ஒன்று உள்ளது. பக்தர்கள் காணிக்கையாக ரூ.700 கட்டினால், தங்க ரதத்தை இழுக்க அனுமதிக்கப்படுகின்றனர். திருவிழா இல்லாத நாட்களில் மட்டுமே தங்க ரதம் இழுக்க அனுமதிக்கப்படுகிறது. அப்போது அம்பாளுக்கு தங்கக் கவசமும் அணிவிக்கப்படும்.
இங்குள்ள அம்மனை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பாலாலயம் செய்து பின்னர் ஆலய பீடத்தில் மீண்டும் அமர்த்துகிறார்கள்.
இந்த மாரியம்மனை அயோத்தி மன்னன் தசரதன் வழிபட்டதாகவும், அருகில் உள்ள ஓம்கார உஜ்ஜயினி காளி ஆலயத்துக்கு விக்கிரமாதித்ய மகாராஜா வந்து வழிபட்டதாகவும் கதைகள் உள்ளன.
உலகை ஆள்பவள் மாரியம்மன். என்றாலும், கண்ணபுரத்தின் காவல் மற்றும் எல்லை தெய்வம் செல்லாண்டி அம்மன். ஆகையால் இங்கு முதல் பூஜை அவளுக்குக் கொடுத்த பின்னரே ஏற்றுக் கொள்கிறாள் சமயபுரத்தாள்.
இங்கு, அம்பாள் சிவ ரூபமாகக் கருதப்படுவதால் விபூதி விசேஷ பிரசாதமாக வழங்கப்படுகிறது. பிற அம்மன் கோயில்களில் பண்டாரத்தார் பூஜை செய்வார்கள். இங்கு மட்டும் சிவச்சார்யர்கள் பூஜிக்கிறார்கள்.
விஜயநகரப் பேரரசின் காலத்தில் ஸ்தல விருட்சத்துக்குக் கீழே உள்ள புற்றில் நாகம் ஒன்று வசித்ததாம். அர்த்த ஜாம பூஜை முடிந்ததும் இந்த நாகம் கருவறைக்குச் சென்று அம்மனை பூஜிக்குமாம். அதனால் அம்மனின் நிர்மால்ய பூக்கள் கருவறைக்குள் சிதறிக் கிடக்கும். இந்தக் காட்சியை மறு நாள் உஷத்கால பூஜைக்கு கருவறைக்குள் நுழையும் அர்ச்சகர்கள் தவறாமல் காண்பது வழக்கமாம். காலப்போக்கில் பக்தர்கள் நடமாட்டம் அதிகமானதால், அந்த நாகம் வெளியே வருவதில்லையாம். அந்த இடத்தில் தற்போது கம்பிக் கதவு போட்டிருக்கிறார்கள்.
தைப்பூசத்தின்போது அம்மன், கொள்ளிடக் கரையின் தென் பகுதியில் நீராட வருவாள். கொள்ளி டம்தான் அண்ணன் ஸ்ரீரங்கநாதரையும், தங்கை சமயபுரத்தாளையும் பிரிக்கிறது. அன்று ஸ்ரீரங்கம் பெருமாள் ஆலயத்திலிருந்து பட்டுப் புடவைகள், மாலைகள், தளிகைகள் ‘மகமாயி’க்கு சீராக அனுப்பி வைக்கும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. இதை தீர்த்தவாரி விழா என்பர். தை மாத பெருவிழாவின் 2&ஆம் திருநாளிலிருந்து 8&ஆம் நாள் வரை சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷம், குதிரை ஆகிய வாகனங்களில் அம்மன் உலா வருகிறார். 9&ஆம் நாள் தெப்பத் திருவிழா.
சமயபுரம் மகமாயிக்கு நடைபெறும் முக்கியமான விழாக்கள்: சித்திரை மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமையன்று நடைபெறும் & தேர்த் திருவிழா, வைகாசி மாதத்தின் முதல் நாளன்று நடைபெறும் பஞ்சப் பிரகார விழா, மாசி மாதத்தின் கடைசி ஞாயிறன்று நடைபெறும் பூச்சொரிதல் விழா.
பக்தர்கள் அம்பாளை வேண்டி விரதம் இருப்பது நடைமுறை. ஆனால், இங்கு பக்தர்களுக்காக அம்மனே விரதம் இருக்கிறாள்! இது ‘பச்சைப் பட்டினி விரதம்’ எனப்படுகிறது. மாசி மாதக் கடைசி ஞாயிறன்று நடைபெறும் பூச்சொரிதல் திருவிழாவுடன் அம்மனின் இந்த விரதம் துவங்குகிறது. பூச்சொரிதலின்போது அம்மனுக்கு பூக்கள் வந்து குவியும்.
விரத காலமான மாசி முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை 27 நாட் களும் அம்பாளுக்கு ஒரு வேளை மட்டும் அதாவது சாயரட்சை பூஜையின்போது இளநீர், மோர், பானகம், துள்ளு மாவு (பச்சை அரிசி மாவு + நாட்டுச் சர்க்கரை), வெள்ளரிப் பிஞ்சு ஆகியவை நிவேதிக்கப்படுகின்றன. இந்தக் காலத்தில் ஊர் மக்களும் அம்மனுடன் சேர்ந்து விரதம் இருப்பது வழக்கம்.
சித்திரை மாதத்தின் கத்தரி வெயிலில் அம்மை& வைசூரி போன்ற நோய்கள் மக்களுக்கு ஏற்படும். அந்த வெப்பத்தைத் தான் ஏற்றுக் கொண்டு, மக்களை குளிர வைக்கும் மாரித்தாயின் உடல் வெப்பத்தை தணிக் கவே, பக்தர்கள் அம்பாளுக்கு பூமாரி பொழிந்து, அவளை குளிரச் செய்கிறார்கள். அப்போது அயல் நாடுகளில் இருந்தும் பக்தர்கள் கூடை கூடையாகப் பூக்களை அனுப்பி வைக்கிறார்கள்.
பூச்சொரிதல் திருவிழாவையட்டி விக்னேசுவர பூஜை, புண்யாகவஜனம் முடித்த பிறகு முறைப்படி மாரியம்மனுக்குக் காப்பு கட்டுகிறார்கள். பிறகு, திருக்கோயிலின் தென்கரையிலுள்ள சுப்ரமணியசுவாமி கோயிலில் சிறப்புப் பூஜை செய்து, மூன்று யானைகள் மீது பூத்தட்டுகள் வைத்து திருக்கோயில் முன்மண்டபத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள். தேரோடும் வீதிகள் நான்கின் வழியாகத் தேரடி வந்து, பின்னர் ராஜ கோபுரம் வழியாகப் பிரதட்சணம் செய்து, பூத்தட்டுகள் கருவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அம்மனுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
பங்குனி& சித்திரையில் 13 நாட்களுக்கு சித்திரைப் பெரு விழா நடக்கும். சித்திரை மாதம் முதல் செவ்வாய் தேரோட்டமும், அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை தெப்பமும் நடைபெறும். அப் போது முடி காணிக்கை, ஆடு, மாடு, கோழி காணிக்கை, அக்னி சட்டி எடுத்தல் ஆகிய நேர்த்திக்கடன்கள் நிறைவேற்றப் படும்.
தேர்த் திருநாளில் பக்தர்கள் ஆற்றில் குளித்து ஈர உடையுடன் ஆற்று நீரைச் சுமந்து அம்மனின் பாதத்தில் ஊற்றிக் குளிர வைப்பர். வைசூரி அகலவும், மழை பொழியவும், பால் சுரக்கவும், வறுமை நீங்கவும் இது நம்பிக்கையுடன் செய்யப்படுகிறது. அன்றைய தினம் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
தேர்த் திருவிழாவின் எட்டாம் நாளன்று, சமயபுரத்தாள், இனாம் சமயபுரத்துக்குச் சென்று ஒரு நாள் இரவு தங்குகிறாள். 9&ஆம் நாள் குதிரை வாகனத்தில் புறப்பட்டு வருவார். பத்தாம் நாளில் திருவானைக்காவில் அருள் புரியும் ஸ்ரீஜம்புகேஸ்வரர், மாரியம்மனுக்கு சீர்வரிசை அனுப்பி வைப்பார். அண்ணனிடமும், ஈஸ்வரனிடமும் சீர்வரிசை பெறும் அம்மன் இவள் மட்டுமே!
இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதி மாரியம்மன் கோயிலுக்குச் சென்று வணங்கிய பின்னரே, கண்ணனூர் சமயபுரம் மாரியம்மனை தரிசிப்பது சுற்றுப்புற கிராம மக்களது வழக்கம்.
சித்திரை மாத இறுதியில் தொடங்கி வைகாசி முதல் தேதி வரை பஞ்சப் பிராகார உற்சவம் நடக்கும்.
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பால், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகிய அபிஷேகங்கள் ஆடி& தை வெள்ளிக் கிழமைகள், சித்ரா பௌர்ணமி, நவராத்திரி ஆகிய தினங்களில் விசேஷமாகச் செய்யப் படுகின்றன.
புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை அன்று இங்குள்ள அம்மன் முன், புதிய மூங்கில் தட்டு ஒன்றில் பச்சரிசி, தேங்காய், பழம், வெற்றிலை& பாக்கு மற்றும் காய்கறிகள் ஆகியவற்றைச் சமர்ப்பித்து பூஜிக்கிறார்கள். அதன் பிறகு, அவற்றை அந்தணர்கள் அல்லது ஏழைகளுக்கு தானமாக அளிக்கிறார்கள் பக்தர்கள். இதனால் பித்ரு தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
இங்கு பக்தர்கள் ஈர உடை யுடன் அங்கப்பிரதட்சணம் செய்து, வழிபடுவதுடன், ஆடு, கோழி, தானியங்கள், உப்பு, வெல்லம் ஆகியவற்றுடன் நேர்ந்து கொண்ட வெள்ளியால் ஆன உறுப்புகளையும் தன்னைப் போன்ற மணி பொம்மையையும் காணிக்கை செலுத்துகின்றனர். மேலும், பக்தர்கள் மல்லாந்து படுத்துக் கொண்டு தங்களின் வயிறு மற்றும் கண்களில் மாவிளக்கு தீபம் ஏற்றி வைத்தும் அம்மனை வழிபடுகின்றனர்.
தாலி பலத்துக்காக சுமங்கலிப் பெண்கள் தாம்பூலம், வளையல், கண்ணாடி போன்ற மங்கலப் பொருட்களை தானம் அளித்தால், அம்பாளே பெண்மணியின் உருவில் வந்து இவற்றைப் பெற்றுக் கொண்டு ஆசீர்வதிக்கிறாள் என்பது ஐதீகம்.
குழந்தைப்பேறின்மை, தொழில் பிரச்னை, ராகு&கேது தோஷம் உள்ளவர்கள் சமயபுர மகமாயியை தரிசித்தால், அவள் கண்டிப்பாக பலன் தருவாள் என்பது பக்தர்களின் ஆழமான நம்பிக்கை.
பிரபல சரித்திர நாவலாசிரியர் கோவி. மணி சேகரனுக்கு பார்வை குன்றியபோது இங்கு வந்து மனமுருகி பிரார்த்தித்தாராம். அதனால் மீண்டும் பார்வை பெற்றார் என்கிறார்கள். சமயபுரம் மாரியம் மனைத் துதித்து பாடல்கள் எழுதியுள்ளார் இவர்.
பார்வை இழந்த சிவந்திலிங்க சுவாமிகள் இந்த அன்னையின் மீது அருட்பாக்கள் பாடி கண்ணொளி பெற்றிருக்கிறார்.
அம்மை நோய் பீடித்தவர்கள் தங்கி குணம் பெற இங்கு தனி மண்டபம் ஒன்று உள்ளது. இந்த நோயாளிகளுக்கு தினமும் அம்மனின் அபிஷேகத் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனால் விரைவில் நோய் குணமடைவதாக பக்தர்கள் நம்புகின்றனர். இங்கு உயிர்ப்பலி கிடையாது. அம்மனுக்கு மாவிளக்கும், எலுமிச்சம் பழ மாலையும் விருப்பமானவை.
நமது குறைகளை ஒரு காகிதத்தில் எழுதி, ஸ்தல விருட்சமான வேப்ப மரத்தில் கட்டி விட்டுப் பிரார்த்தித்தால், குறைகள் தீரும். இதற்கான மஞ்சள் காகிதங்களை ஆலய நிர்வாகமே விற்பனை செய்கிறது.
இங்கு ‘கரும்புத்தூளி எடுத்தல்’ என்ற விசேஷப் பிரார்த்தனை பிரசித்தம். குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் நேர்ந்து கொள்வது இந்த வேண்டுதல். அன்னையின் அருளால் கருவுற்று, சீமந்தம் முடிந்த பின், சீமந்தப் புடவை& வேஷ்டியைப் பத்திரமாக வைத்திருப்பர். குழந்தை பிறந்ததும் ஆறாவது மாதத்தில் இதைச் செய்கிறார்கள். அன்று பத்திரப்படுத்திய துணிகளை மஞ்சள் நீரில் நனைத்து கரும்புத் தொட்டில் தயார் செய்து அதில் குழந்தையைக் கிடத்துகிறார்கள். அந்தத் தொட்டிலைப் பிடித்தபடி தந்தை முன்னே செல்ல, தாய் பின்தொடர மூன்று முறை வலம் வந்து பிரார்த்தனை செலுத்துகிறார்கள். துணிகளைப் பூசாரி எடுத்துக் கொண்டு, கரும்பை பக்தர்களுக்கு விநியோகிக்கிறார்கள்.
சமயபுர மகமாயிடம் அதிக பக்தி கொண்டவர் சூரப்ப நாயக்கர். இவர், ஒரு முறை அன்னையின் ஆசி பெறாமல் புதிய உற்சவர் விக்கிரகம் ஒன்று செய்து பிரதிஷ்டை செய்ய முயன்றார். அதற்குப் பல தடைகள் ஏற்பட்டன. இறுதியில் சூரப்ப நாயக்கர் கண்ணீர் மல்க அன்னையிடம் மன்றாடி மன்னிப்புக் கோரினார். அன்னை மனமிரங்கி அவருக்கு அனுமதி அளித்தாள். இன்றும் பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாள் திருவீதி உலாவின்போது சூரப்ப நாயக்கர் செய்த விக்கிரகம் இடம் பெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *