ஸ்ரீபக்தஹனுமான் ஆலயம் – Farmington Hills, Michigan, USA…..

   

முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு முதன் முறையாக மக்கள் வெள்ளம் அலை மோதியது.

அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மட்டுமல்லாமல் ஸநாதன தர்மத்தை பின்பற்றும் பல அமெரிக்கர்களும் சங்கமித்த ஒரு அற்புதமான வைபவம்.

திரேதா யுகத்தில் விஸ்வ ரூபம் எடுத்தார் ஆஞ்சநேயர். கடல் கடந்து சென்று சீதையைக் கண்டார். இமயமலைப் பகுதியில் இருக்கும் சஞ்ஜீவினி மலையையே பெயர்த்தெடுத்து மீண்டும் கடல் கடந்து லக்ஷ்மணனின் உயிரை மீட்டார் என்பதெல்லாம் இதிஹாஸம்.

இன்று ஒரு புதிய வரலாறு கண்டுகொண்டிருக்கிறோம். பதினாறு அடி உயரம் கொண்ட விஸ்வ ரூப ஸ்ரீபக்தஹனுமான் கடல் கடந்து அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தின் Farmington Hills நகரத்தில் எழுந்தருளியிருக்கிறார்.

அவருடன்இணைந்து ஸ்ரீகுருவாயூரப்பனும் பயணித்து அங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டு காட்சியளித்துக்கொண்டிருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்னதாகவே பரந்தாமனின் அடியார்களான பன்னிரு ஆழ்வார்களும், வைணவம் வளர்த்த உடையவர் ஸ்ரீராமானுஜரும் இங்கு வந்தமர்ந்தனர். இவர்களுடன் சேர்ந்து பெருமாள்-தாயார், லக்ஷ்மண ஹனுமான் ஸீதா ஸமேத பத்ராசல ஸ்ரீராமர்,

உத்ஸவ மூர்த்திகளும் அங்கே அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தக்கோவிலை நிறுவிய ஸ்ரீமதி விஜி, ஸ்ரீவிஜயராகவன் தம்பதியர், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் வசித்து வருபவர்கள். பலவிதமான தொழில்களிலும், வியாபாரங்களிலும் முன்பு ஈடுபட்டிருந்திருந்தாலும், இறை பணியே தங்கள் வாழ்க்கைப் பணியாக மேற்கொண்டு சிறந்ததொரு சேவையை செய்து வருகிறார்கள் என்றால் அது மிகையாகாது.

ராமாயண இதிஹாஸத்தில் ராகவனின் ஆணைப்படி ஹனுமன் கடலைக் கடந்தான். இன்றும், அமெரிக்காவாழ் விஜயராகவன் அவர்களின் வேண்டுதலுக்கு செவிசாய்த்து ஹனுமன் கடல் கடந்து Farmington Hills சென்றடைந்திருக்கிறார்.

இந்த உத்ஸவமூர்த்திகளையும், மூல விக்ரஹங்களையும் வடிக்கச் செய்து அமெரிக்காவை அடையச் செய்யும் வரை மொத்த விஷயங்களை இயக்கியதும் கிரி நிறுவனத்தின் ராமன்தான்.

மூன்றுநாட்களும், நாள் முழுவதும் வேதமந்திரகோஷங்கள் ஒலிக்க, பகவன் நாமாக்களும், கர்நாடக ஸங்கீதமும் இசைக்கப்பட, யாகசாலைகள் அமைக்கப்பட்டு, ஹோமங்கள் நடத்தப்பட்டு, பலவித அபிஷேகங்கள் செய்யப்பட்டு, Farmington Hills ஸ்ரீபக்தஹனுமான் ஆலயமே பக்தி வெள்ளத்தில் ஆழ்ந்திருந்தது.

இன்னும் முக்கியமான கோவில் விமானம் தயாரிக்கப்பட்டு சென்னையில் இருந்து அமெரிக்காவிற்கு கப்பலில் புறப்பட தயார் நிலையில்இருக்கிறது.

ஆலய தரிசனத்திற்காக வேங்கடவனின், ராமனின், ஹனுமனின் அருளைப் பெற, பக்தர்கள் பலவாறாக வந்த வண்ணம் உள்ளனர். வட அமெரிக்காவில் வசிக்கும், செல்லும் அனைவரும்வழிபட்டு, சகல நலன்களையும் பெற்று, பெருவாழ்வுவாழ, தரிசிக்க வேண்டிய மிக முக்கியத்தலம் Farmington Hills ஸ்ரீபக்தஹனுமான்ஆலயம்.

—–

ஆசிரியர்: டி.எஸ். ரங்கநாதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *