ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மகாகும்பாபிசேகம்

மூலவர் : பாலசுப்பிரமணியர்
இடம்: ஆண்டார் குப்பம், திருவள்ளுர் மாவட்டம் – 601204
தரிசனம் மற்றும் கும்பாபிசேகம் நாள் : 18.03.2016

 

இத்திருத்தலம் செல்வதற்கு சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்தும், பொன்னேரியிலிருந்தும்  செல்வதற்கு பேருந்து வசதிகள் உள்ளன. கோயம்பேட்டிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் ஆண்டார் குப்பம் அமைந்துள்ளது. கோயம்பேட்டிலிருந்து வரும் பேருந்து, செங்குன்றம் வழியாக தச்சூர் கூட்டு சாலை வந்து, வலப்புறம் பொன்னேரி செல்லும் சாலையில் திரும்பும். இந்த சாலையில் ஆண்டார்குப்பம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சுமார் 1 கி.மீ தூரம் மீண்டும் இடப்புறம் செல்லும் சாலையில் சென்றால் திருத்தலத்தை அடையலாம். சொந்த வாகனத்தில் செல்வது உசிதம்.

சொந்த வாகனத்தில் வருபவர்கள் தச்சூர் கூட்டுச் சாலையில் இருந்து வலப்புறம், திரும்பாமல் நேரடியாகவும் செல்லலாம். அவ்வாறு செல்பவர்கள், சிறுவாபுரி பேருந்து நிறுத்தத்திற்கு முன்பு பெரவள்ளுர் என்ற ஊரில் வலப்புறம் செல்லும் சாலையில் சுமார் 1 கி.மீ. தூரம் சென்றாலும் இத்தலத்தை அடையலாம்.

இத்திருத்தலத்தின் மகா கும்பாபிசேகம் 18.03.2016 அன்று மிக சிறப்பாக நடைபெற்றது. அருணகிரியார் அவர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன்பே ‘தச்சூர் வடக்காகு மார்க்கத்து அமர்ந்த பெருமாளே’ என்று திருப்புகழ் பாடிய பெருமையுடைய தலம் ஆண்டார் குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி திருத்தலம் என்று செய்தி குறிப்புகள் மூலம் அறிய முடிந்தது.

இத்தலத்தில் குமாராசஷ்டி இலட்சார்ச்சனைக் குழு, இலட்சார்ச்சனையை 06.12.2013 மிகச் சிறப்பாக நடத்திய செய்தியினை சண்முககவசம் டிசம்பர் 2013 இதழில் வாசகர்கள் படித்திருப்பீர்கள் என்பதனை நினைவு ஊட்ட கடமைப்பட்டுள்ளேன்.

என்ற திருமுருகாற்றுப் படை வெண்பாவை பாடிய நிலையில் திருத்தலத்தில் நுழைகிறேன் பக்த கோடிகளின் பரவ ஒலியினையினையும் கேட்ட வண்ணம்.

‘வேல் வேல் முருகா! வேல் முருகா! வெற்றி வேல் முருகா!’
‘ஆரோகரா! ஆரோகரா! கந்தனுக்கு ஆரோகரா!
வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா!’
என்று பக்தர்கள் பரவத்துடன் பாடும் பாடலின் ஒலி அலைகள் விண்ணில் மிதந்து சென்றன.

யாகசாலையில்இருந்து கலசங்கள் மேள தாளத்துடன் எடுத்து வரப்பட்டன. சிவாச்சார்யார்கள் வேதங்கள் ஓத, கோபுரத்தில் கும்பத்தில் தீர்த்தங்கள் ஊற்றப்பட்டு, பக்தர்களுக்கும் தீர்த்தங்கள் தெளிக்கப்பட்டன. இத்தலத்தின் கும்பாபிசேகத்திற்கு எனது துணைவியார் மற்றும் அலுவலக நண்பர்களுடன் சென்று முருகப் பெருமானை தரிசிப்பதற்கு வாய்ப்பளித்த இறைவனின் தனிப் பெருங்கருணையே என்பதனை இத்தருணத்தில் கூறிக் கொள்கிறேன்.

இத்திருத்தலம் சுமார் 500-1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதனை தலபுராணம் மூலம் அறிய முடிந்தது. முருகனுக்கு பால் அபிசேகம் மஞ்சள் காப்பு அளிக்கப்படுகின்றது. இத்தலத்தில் முருகப் பெருமான் காலையில் குழந்தை ரூபத்திலும், நண்பகலில் இளம் வாலிபராகவும், மாலை நேரத்தில் முதியவராகவும் காட்சியளிப்பது இத்தலத்தின் சிறப்பு என்று குருக்கள் கூறினார். இத்தலத்தில் நடைபெறும் பொதுவான முக்கிய விசேசங்களை பட்டியிலிடுகிறேன்.
1. சித்திரை பிரமோற்சவம் : ஏப்ரல் – மே
2. வைகாசி விசாகம் : மே – ஜூன்
3. ஆடி கிருத்திகை : ஜூலை – ஆகஸ்ட்
4. குமார சஷ்டி, சந்த சஷ்டி : அக்டோபர் – நவம்பர்

இத்திருத்தலம் திறந்திருக்கும் நேரம் காலை 0630 முதல் 13.30 வரை. மாலை 16.00 முதல் 20.30 வரை. மற்றும் திருத்தலம் பற்றி தகவல்கள் அறிந்து கொள்ள தொலைபேசி எண் 2797 4193 மற்றும் கையகப்பேசி எண் 9962960112.

ponrajச.பொன்ராஜ்,

7ஃ497 ‘டி’ பகுதி,சிட்கோநகா; 58வது தெரு, வில்லிவாக்கம் சென்னை-600 049
ponpuni2002@gmail.com
கையகப் பேசி – 9962040695
தொலைபேசி – 26171965