இலண்டன் ஈஸ்ட்காம் திருமுருகன் கோவில் தேரோட்டம்

நமது நாட்டில் மாவட்டம் என்று குறிப்பிடுவது போல் இலண்டனில் உள்ள எல்லைப் பகுதிகளை போரோ (Borough) என்றுஅழைக்கின்றார்கள். ஈஸ்ட்காம் என்பது இலண்டனுக்கு உட்பட்ட நீயூகாம் (Newham) என்றபோரோவில் அடங்குவது ஆகும். 59 ஆம் ஆண்டிலேயே இவ்வூர் உருவாக்கப்பட்டதாக செய்தி குறிப்புகள் கூறுகின்றன. இங்குள்ள இரயில் நிலையத்திற்கு ஈஸ்ட்காம் இரயில் நிலையம் என்றுபெயர்.

1859 ல் இந்த இரயில் நிலையம் திறக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. ஈஸ்ட்காமில் அமைந்துள்ள திருத்தலம் ஈஸ்ட்காம் திருமுருகன் கோவில் என்று அழைக்கப்படுகின்றது. இத்தலத்தில் 31.07.2016 அன்று மிகசிறப்பாக தேரோட்டத் திருவிழா நடைபெற்றது. தேர்திருவிழாவின் போது இத்தலத்திற்குச் சென்று இறைவனை வழிபட வாய்ப்பு கிடைத்தது குறித்து பெருமகிழ்வு கொள்கிறேன். தலம் பற்றிய விவரங்களை இணையதள மெய்யன்பர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இதனை இந்ததளத்தில் பதிவு செய்கிறேன்.
திருத்தலத்தில் நுழைந்ததும், வினாயகப் பெருமான் சன்னதி நமது கண்ணுக்கு நேர் எதிரில் தென்படுவதைக் காணலாம். வேதத்தில் பிரம்மதேவனையே கணபதி என்று ரிஷிகள் வணங்குவதாக நான் படித்தது உண்டு.

பிரணவ மந்திரத்தின் வடிவம் அல்லவா வினாயகப் பெருமான்? வினாயகரை வணங்கிவிட்டு முருகன் சன்னதிக்குசெல்கிறோம். திருமுருகன் வள்ளி தெய்வானையுடன் காட்சி அளிக்கிறார். அர்ச்சனை நடைபெற்றது. முருகப் பெருமானைகண் குளிரத் தரிசிக்கின்றோம். இத்தலத்தின் முக்கிய மூலவர் முருகன் ஆகும். இதன் பின் அங்குள்ளவளாகத்தில் வலம் வரும் போது எந்தன் ஈசன் புவேனஸ்வரனுக்கு உரிய சன்னதியை நாம் கண்டு வணங்கிடலாம்.

‘தென்னாடுடையசிவனேபோற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி’
சன்னதியின் முன்னிலையில் போற்றிக் குரல் கேட்டது. எம்மையும் போற்றிபாடலை மனமுருகப் பாடவைத்தது. அருகில் அருள்மிகு அம்பாள் புவனேஸ்வரியின் சன்னதியும் தனியாக இருக்கக் கண்டோம். பரமாத்மா வேறாகவும் பராசக்தி வேறாகவும் நினைத்துப் பார்ப்பது தவறு என்பதனை உணர்ந்துதான் இத்திருக்கோவிலில் பரமனுக்கும் சக்திக்கும் ஒன்றிணைந்த இரு சன்னதிகளைஅருகில் அருகில் வைத்துள்ளனர் போலும்.

சர்வலோகங்களையும் பரமாத்மா சக்திரூபமாக நின்று காத்து அருள்வதை உணர்ந்த அருள் பேராளர்கள் இலண்டனில் இந்த இடத்தில் அவர்களுக்கெனத் தனித்தனி சன்னதிகள் வைத்து இங்குவரும் மக்களுக்கு அருள் பேரற்றால் கிடைக்கச் செய்த உள்ளங்களை என்னால் பாராட்டாமல் இருக்க முடியாது. சற்று வலப்புறத்தில் தில்லை நடராஜர் சிவகாமி அம்மாளுடன் காட்சி அளிக்கிறார்.

கடல் கடந்து வந்து இங்கிலாந்தை சுற்றிப் பார்க்கலாம் என்று கருதிய அடியேனுக்கு இங்குள்ள திருக்கோவிலிலும் யான் மானசீகமாக வணங்கும்அரும்பெரும்சித்தராம் பொதிகைமலையில் ஈசனின் திருமணக் கோலத்தை கண்டுகளித்த தமிழ் பெருந்தகை அகத்தியராம் அப்பெருந்தகைக்கு இங்கு ஓரு சன்னதி இருக்கக் கண்டேன். இதற்கு அடுத்தாற்போல் அருணகிரிநாதரையும் பாபா பாலக்நாத் திருஉருவங்களையும் தரிசிக்கலாம். அருகில் ஐயப்பனின் திருஉருவம் இருக்கக் கண்டோம். இதற்குஅடுத்து தரிசிக்க வேண்டிய தெய்வம் அருள்மிகு வெங்கடேஷ்வரர். அருள்மிகு அம்பாள் லட்சுமி குருவாயூரப்பன் அருகில் அருள்பாலிக்கின்றனர். இதன் பின் ஆஞ்சநேயரை தரிசனம் செய்யலாம். பொதுவாக அனைத்து சிவன் கோவிலிலும் அருள்பாலிக்கும்; தட்சிணாமூர்த்தி, பைரவர், லிங்கோத்பவர்; குகன், பிரம்மா, சண்டிகேஷ்வரர், நவகிரகங்கள், துர்க்கை அம்மன் ஆகிய அருள்மிகுதெய்வங்களையும் இத்தலத்தில் கண்டு வணங்கிடலாம். இத்தலத்தில் தேரோட்டத்தினை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோவில் வளாகத்தின் உட்பகுதியில் நவகிரகசன்னதிக்கு அருகில் கலச பூஜைக்குரிய பகுதி பிரத்தியோகமாக அலங்காஜீத்த வண்ணம் அமைக்கப்பட்டு இருந்தது.

திருத்தலத்தின் வீதியில் தேரோட்டம் நடைபெறுவதைக் கண்டபோது, தமிழ்நாட்டின் தெய்வீக கலாச்சாரத்தை பறைசாற்றுவதுபோல் இருந்தது என்று கூறலாம். திரளான மெய்யன்பர்களின் கூட்டம் அங்கே பக்தி பரவசத்தை ஏற்படுத்தியது. பாதுகாப்பு ஏற்பாடுகள் பாராட்டும் படியாக இருந்தது. ஆயிரக்கணக்கான மெய்யன்பர்கள் பங்குகொண்ட இந்த தேரோட்டத் திருவிழாவில் அனைவருக்கும் அன்னதானம் ஏற்பாடுசெய்து இருந்தனர்.

இதற்காக பிரத்தியோகமான துணிபந்தல் அமைந்திருந்தனர். இலவச தண்ணீர் பாட்டில்கள் பக்தர்களுக்கு அளிக்கப்பட்டன. மேலும் மோர், நெல்லிக்கனி ஜுஸ், ரோஸ்மில்க் போன்றகுளிர் பானங்கள் வினியோகிக்கப் பட்டன. மேளதாளத்துடன் தேர் வீதியில் பவனி வந்த காட்சி ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும். வீதி ஊர்வலத்தில் பக்தர்களின் திருமுருகனின் கோசம் விண்ணில் அலைமோதின.

‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! வீரவேல் முருகனுக்கு அரோகார’!

இலண்டனில் நாங்கள் தேரோட்டத் திருவிழாவில் கலந்துகொண்டாலும், தமிழ்நாட்டில் திருவாருர் தேரோட்டத் திருவிழாவில் கலந்து கொண்டோம் என்ற எண்ணம் எங்களுக்குள் உதயமானது. ஆம் அந்த அளவுக்கு மிகசிறப்பாக தேரோட்டத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது என்று கூறினால் அதுமிகையாகாது.

ponrajச.பொன்ராஜ்,

7ஃ497 ‘டி’ பகுதி,சிட்கோநகா; 58வது தெரு, வில்லிவாக்கம் சென்னை-600 049
ponpuni2002@gmail.com
கையகப் பேசி – 9962040695
தொலைபேசி – 26171965

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *