கும்பகோணம் திருக்கருகாவூர்
அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோவில்
எம்பெருமான் : முல்லைவனநாதர்
அம்பாள் : கர்ப்பக ரட்சாம்பிகை
தரிசன நாள் : 29.01.2016
இடம் : திருக்கருகாவூர், பாபநாசம் வட்டம், தஞ்சாவூர்; மாவட்டம், பின்கோடு-614302
திருக்கருகாவூர் என்ற ஊர் கும்பகோணம் தஞ்சாவூர் சாலையில் அமைந்துள்ள ஊராகும். கும்பகோணத்திலிருந்து 23 கி.மீ.தூரத்திலும் பாபநாசத்திற்குத் தெற்கில் 6 கி.மீ தூரத்திலும் அமைந்தள்ளது. திருக்களவூர் என்று பொதுவாக அழைக்கப்படும் இத்தலம் முல்லைவனம், திருக்கருகாவூர், கர்ப்பபுரி, மாதவிவனம் என்ற பெயர்களிளும் அழைக்கப்படுகின்றன. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோர்களால் பாடல் பெற்ற தேவாரத் திருத்தலமாகத் திகழ்கின்றது. திருக்கருகாவூர் தலம் பஞ்ச ஆரண்ய தலங்களில் முதன்மையான தலமாகத் திகழ்கின்றது. இத்தலம் காவிரி தென்கரையில் அமைந்துள்ள தேவாரத் திருத்தலங்களில் 18 வது தலமாகும்.
பஞ்ச ஆரண்ய தலங்கள் : 1. திருக்கருகாவூர் 2. திரு அவளிவ நல்லூர் 3. திருஅரதைப் பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்). 4. ஆலங்குடி 5. திருகொள்ளம்புதூர்.
திருக்கருகாவூர் செல்லும் மெய்யன்பர்கள் இந்த பஞ்ச ஆரண்ய தலங்களை ஒரே நாளில் உஷத காலத்தில் இருந்து அர்த்த சாம பூஜைக்குள் தரிசிப்பது மிகவும் சிறப்பு என்று கூறப்படுகின்றது. திருக்கருகாவூர் திருத்தலத்தின் மகா கும்பாபிசேகம் 29.01.2016 நடைபெற்றது. திருப்பட்டீஸ்வரம் கும்பாபிசேகம் நடைபெற்ற இதே நாளில் இங்கு கும்பாபிசேகம் நடைபெற்றது. அடியேனுக்கும் நண்பர்கள் சகிதம் இத்தலத்தின் கும்பாபிசேக நாள் அன்று செல்வதற்கு வாய்ப்பு கிடைத்து. இத்தலத்தில் எம்பெருமான் முல்லைவனநாதர் அருள்மிகு கர்பக ரட்சாம்பிகை சமேத அருள்பாலிக்கின்றார். இத்தலத்தின் உள்ளே நுழைந்ததும் வடப்பக்கம் வசந்த மண்டபம் அமைந்தள்ளதைக் காணலாம். அடுத்து முதலில் உள்ள பெரிய பிரகாரத்தில் எம்பெருமான் அருள்பாலிக்கும் கோவிலும்,இதன் வடப்பக்கம் அம்பாளின் கோவிலும் இருப்பதைக் காணலாம். இவ்விருகோவில்களுக்கும் தனி தனி பிரகாரங்கள் உள்ளன. இத்தலத்தின் தலமரம் முல்லைக் கொடியாகும்.
இத்தலத்தில், மூலவர் முல்லைவனநாதர், கற்பக வினாயகர், திருநந்தி தேவர் மூவரும் சுயம்பு ரூபத்தில் பக்தர்களை அருள்பாலிக்கின்றனர். எம்பெருமான் புற்றுருவாக இருப்பதால் இங்கு சுவாமிக்கு அபிசேகம் செய்யப்படுவதில்லை. புனுகு மட்டும் மாதம் தோறும் வளர்பிறை ப்ரதோஷ தினத்தில் சாத்தப்படுவதாக திருத்தலத்தின் குருக்கள் மூலம் அறிய முடிந்தது. சோமஸ்கந்தருக்கு இங்கு தனி சன்னதி உள்ளது.
இத்தலத்தில் பிராத்தனைக்கு வருபவர்கள் முதலில் கற்பக வினாயகரை வணங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது. பிரகாரத்தில் சந்தானச்சாரியர் மற்றும் தேவாரம் திருவாசகம் அருளிய நால்வர் பெருமான்களுக்கும் மூர்த்திகள் உள்ளன. நிருதி வினாயகர் தனியொரு கோவிலில் இருந்து அருள்பாலிக்கின்றார். இத்தலத்தில் அய்யனார், தட்சிணாமூர்த்தி, கோஷ்ட வினாயகர்,அர்த்தநாரிஸ்வரர்,
பிரம்மா, சண்டிகேஸ்வரர், பெரிய ரூபத்தில் அமைந்துள்ள துர்கை, ஆகியவர்களை வணங்குவதோடு சண்முக சுப்பிரமணியரையும் தனி சன்னதியில் வழபடலாம். யாகசாலையுடன் கூடிய இத்தலத்தில் 2 நந்திகளும்,கொடிமரமும் உள்ளன. மற்றபடி துவாரஸ்கந்தர், துவார வினாயகர் நந்தியுடன் கூடிய நித்துருவர் சிவலிங்கம் போன்ற அருள்மிகு தெய்வங்களை வணங்கிட மூர்த்திகள் உள்ளன. வெட்டார் நதி ஓரம் அமைந்துள்ள இத்தலத்தில் கௌதமர் சிவலிங்கம் தனி சன்னதியில் அமைந்திருப்பதைக் கண்டு வணங்கிச் செல்லலாம்.
அம்பாள் கர்ப்பக ரட்சாம்பிகை தனியொரு சன்னதியில் இருந்து பக்தர்களை அருள்பாலிக்கின்றாள். இங்கு நவகோடி நெய் தீப பிராத்தனைகள் நடைபெறுகின்றது. அம்பாள் மிகப் பெரிய அளவில் கர்ப்பக் கிரகத்தில் காட்சியளிப்பது ஒரு கண்கொள்ளாக் காட்சி என்று கூறலாம். அம்பாளின் முன்பு நந்தி ஒன்று உள்ளது.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், கருகாத்தநாயகி என்று அழைக்கப்படுகின்ற கர்ப்பக ரட்சாம்பிகையின் பாதத்தில் மந்திரித்து கொடுக்கப்டும் நெய் பிரசாதத்தை தொடர்ந்து 48 நாட்கள் தம்பதியர் சகிதம் சாப்பிட்டு வந்தால், குழந்தை பாக்கியம் நிச்சயம் கிட்டும். குழந்தை பேறு வேண்டுபவருக்கும், பிராத்தனை நிறைவேற்றுபவருக்கும் தங்கத் தொட்டில் இங்கு அமைந்துள்ளது. அம்பாளிடம் வேண்டி, குழந்தைப்பேறு பெற்றவர்கள், குழந்தையை இத்தொட்டிலில் இட்டு, அம்பாள் சன்னதியை வலம் வந்து தங்களது பிரார்த்தனையை நிறைவு செய்வது இன்றும் வழக்கத்தில் உள்ளது.
கர்பிணி பெண்கள் அம்பாள் பாதத்தில் வைத்து மந்திரித்து தரப்படும் விளக்கெண்ணை பிரசாதத்தை வயிற்றில் தடவிச் சென்றால், சுகப்பிரசவம் பெறும் என்று பெரிதும் நம்பப்படுகின்றது. திருமணம் கைகூடாத கன்னியர்கள் அம்பாள் சன்னதியின் படியினை நெய்யால் மெழுகி கோலமிட்டு பிராத்தனை செய்து வந்தால் நிச்சயம் திருமணம் கைகூடும்.
வம்ச தோஷம் நீங்க ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் அம்பாள் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுமாறு கூறப்படுகின்றது. அடிக்கடி கர்ப்பச் சிதைவு ஏற்பட்டு, மகப்பேறின்றி தவிக்கும் பெண்கள் இத்தலத்து இறைவனையும், அம்பாளையும் வழிபட்டு நேர்த்தி கடன் செய்து நன்மக்கட் பேற்றினை பெற்று வருகின்றனர் என்பது இத்தலத்தின் குறிப்பிடத்தகுந்த அற்புதச் செய்தியாகும். இந்த திருத்தலத்தின் முன்னாள் அமைந்துள்ள பாற்குளம் என்று அழைக்கப்படுகின்ற ஷிரகுண்டம் தெய்வப் பசுவாகிய காமதேனுவின் காலால் உருவாக்கப்பட்ட சிறப்பினை பெற்றுள்ளது. ஊரின் நான்கு வீதிகளுக்கு இடையில் பாங்குற அமைந்துள்ள இத்திருத்தலத்தின் நீளம் 460 அடி. அகலம் 284 அடி. இத்தலத்தின் கீழ்திசையில் ஒரு இராஜகோபுரமும், தென்திசையில் ஒரு நுழைவு வாயிலும் அமைந்துள்ளன.
செம்மேனி நாதனாகிய முல்லைவனநாதர் கங்கையாகவும், கருகாத்த நாயகி யமுனை நதியாகவும், இவ்விருவர் ஆலயங்களுக்கு நடுவில் குமார பரமேஸ்வரனாகிய சுப்பிரமணியர் சரஸ்வதியாகவும் விளங்கி, திரிவேணி சங்கமத்தை ஒத்து, சோமாஸ்கந்த சொரூபமாய் விளங்குவதால், இத்தலத்தின் அமைப்பு சோமஸ்கந்த அமைப்பினால் ஆனது என்று கூறப்படுகின்றது. இம்மூவரையும் ஒரு சேர மூன்று முறை வலம் வந்து வணங்கிணால் திரிவேணி சங்கமத்தில் நீராடிய புண்ணியமும்,காசியில் வழிபட்ட புண்ணியமும் ஏற்பட்டு திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும் என்றும், மக்கள் பேறும்,சகல பேறுகளும் கிடைக்கப்பெறும் என்றும் தலவரலாற்றுச் செய்தி மூலம் அறிய முடிகின்றது.
கி.பி ஏழாம் நூற்றாண்டில் இவ்விடத்தில் கொடிகோவில் இங்கு இருந்துள்ளது. முல்லைபந்தலின் கீழ் சுவாமி வீற்றிருந்திருக்கின்றார். அதன் பிறகு கருவறை என்று கூறப்படுகின்ற மூலஸ்தானம் பல்லவர்களாலும், அதன் பின் பெருங்கோவில் பிற்காலத்திய சோழ மன்னர்களாலும் கட்டப்பட்டுள்ளன. கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரர் காலத்தில் இத்தலம் கற்கோவிலாக மாறியுள்ளது. இந்த கோவிலின் தென்சுவரில் 24 கல்வெட்டுகள் உள்ளதாக செய்திகுறிப்புகள் மூலம் அறிய முடிந்தது. மேலும் இத்திருத்தலம் பற்றிய விவரங்கள் அறிந்து கொள்ள அணுக வேண்டிய தொலைபேசி எண் 04374-273423.கையகப்பேசி எண் 9789160819 மற்றும் 8870058269.
7ஃ497 ‘டி’ பகுதி,சிட்கோநகா; 58வது தெரு, வில்லிவாக்கம் சென்னை-600 049
ponpuni2002@gmail.com
கையகப் பேசி – 9962040695
தொலைபேசி – 26171965