217வது கும்பாபிஷேகம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில்
86 பரிகார மூர்த்திகள் கும்பாபிசேகம்
02.02.2017
மகாகும்பாபிசேகம் 06.02.2017
பெருமான் : ஸ்ரீ அண்ணாமலையார்;
அம்பாள் : ஸ்ரீ உண்ணாமுலையம்மன்
இடம் : திருவண்ணாமலை, பின் கோடு-606 601
திண்டிவணத்திற்கு மேற்கே 64 கி.மீ.தூரத்தில் திருவண்ணாமலை அமைந்துள்ளது. அடி முடி எட்டாத நிலையில் இறைவன் மலைஉருவில் தோன்றியதால் அண்ணாமலையார் என்ற திருநாமத்துடன் எம்பெருமான் இங்கு திகழ்கின்றார். 24 ஏக்கர் நிலப்பரப்புடன் கூடிய இத்தலத்தில் எம்பெருமான் உண்ணாமலையம்மையுடன் பக்தர்களைஅருள்பாலிக்கின்றார்.
மிகபிரமாண்ட9 இராஜகோபுரங்களுடன் திகழும் இத்தலத்தில் ஒவ்வொரு பௌர்ணமி தோறும் இங்கு நடைபெறும் கிரிவலத்தில் கணக்கில் அடங்காதவாறு மக்களின் கூட்டம் கடல் எனத் திரளும். எங்கும் எப்போதும் சிவநாம ஒலிகள் எழுப்பிய வண்ணம் இருப்பதனை திருவண்ணாமலை முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். திருக்கார்த்திகை தீபம் மிகச் சிறப்பாக இங்கு கொண்டாடப்படுகின்றது. மலையின் மீது ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை பக்த கோடிகள் திருவண்ணாமலையின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் கண்டு தரிசிக்கின்றனர். தீபதினத்தன்று மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பதினாறுகால் மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் மலையை நோக்கி நிற்க, மலை மீது தீபம் ஏற்றும் விழாநடைபெறும்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் தீபத்தையும், சுவாமியையும் இந்த இடத்தில் இருந்து தரிசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
திரைகாட்சியில் தீபம் ஏற்றும் காட்சியைக் கண்டுகளிக்கும் மெய்யன்பர்கள், மலையில் தீபம் ஏற்றிய காட்சியினை கண்டபின்பு, தங்களது இல்லங்களில் உள்ள விளக்கு மற்றும் அகல் விளக்குகளை ஏற்றும்வழக்கத்தை கொண்டுள்ளனர் என்பது ஒரு குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
தெப்பக்குளத்துடன் கூடிய இத்தலத்தில் முருகன் அருணகிரிக்கு காட்சியளித்த சன்னதியினை இத்தலத்தில் காணலாம். இதன் அருகில் ஸ்ரீபகவான் இரமணர் தவம் செய்த இடம், அருணகிரிநாதர் அன்னதானமண்டபம், ஸ்ரீ பாதாளலிங்கம், கோபுரத்தினையனார் சன்னதிகள் இடம் பெற்றுள்ளன. அருணகிரிநாதர் இரண்டாம் கோபுரத்தின் மீது ஏறி தமது ஊனுடலை நீக்குவதற்கு கீழே விழ இருந்த தருணத்தில் முருகப்பெருமான் அதனை தடுத்தாட்கொண்டுள்ளார். முருகன் சன்னதியில் அருணகிரிநாதாரின் திருஉருவச் சிலை உள்ளது. மூன்றாம் கோபுரம் கிளிகோபுரம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த கோபுரத்தில் கிளியின் உருவம் இருப்பதனைக் காணலாம்.
இத்திருத்தலத்தில் நடராஜர் அய்யப்பன் இலிங்கோத்பவர் கெஜலட்சுமி, முருகர், ,துர்க்கையம்மன் ஆகிய அருள்மிகு தெய்வங்களை தனித்தனி சன்னதிகளில் தரிசிக்கலாம்.
63 நாயன்மார்கள், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர் மற்றும் பல்வேறு இலிங்கத்திருமேனிகளை
இத்தலத்தில் கண்டுவணங்கிடலாம். இத்தலத்தில் உண்ணாமுலையம்மன் தனியொருசன்னதியில் தனியொருகோவிலில் இருந்து பக்தர்களை அருள்பாலிக்கின்றாள். அம்மன் சன்னதியுடன் கூடியகோவிலில் விஜயராகவ வினாயகரை தனிசன்னதியில் வணங்கிச் செல்லலாம்.
வெளிபிரகாரத்தில் காளத்தீஸ்வரர், அருள் தரும் காலபைரவர் பிரதிஸ்டைசெய்யப்பட்டுள்ளன. பெரியநந்தீஸ்வரா; இருக்கும் இடத்திற்கு அருகில் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமண்டபம் அமைந்துள்ளது.
திருஞானசம்பந்தர் 2 பதிகங்களும், திருநாவுக்கரசர் 3 பதிகங்களும் பாடியதேவாரத் திருத்தலமாகும். மாணிக்கவாசகர் இங்குபலகாலம் தங்கி திருவெம்பாவை திருவம்மானை ஆகியபதிகங்களை அருளிச் செய்துள்ளார். சுந்தரர் நக்கீரர், கபிலர், பட்டினத்தார்; இத்தலத்தைபாடல்களில் குறிப்பிட்டுள்ளதாகவும் செய்திகுறிப்புகள் மூலம் அறியமுடிகின்றது.
இத்தகைய பெருமை வாய்ந்த இத்திருத்தலத்தின் கும்பாபிசேகம் 06.02.2017 அன்று நடைபெறுவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருகின்றன.
108 யாககுண்டங்கள் அமைத்து, 1008 கலசங்கள் வைத்துசிறப்பு பூஜை நடந்து வருகின்றது.
அதன் முதற்படியாக 02.02.2017 அன்று இத்தலத்தில் உள்ள 86 பரிவார மூர்த்திகளுக்கு மட்டும் நடைபெற்ற கும்பாபிசேகத்திற்கு யான் அலுவலக நண்பர்களுடன் சென்று வந்தேன். கட்டைக் கோபுரதுக்கு அருகில் உள்ள பிரகாரத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு இருந்தது.
02.02.2017 அன்றுகாலை 08.05 மணிக்கு யாகசாலையில் விசேச சந்திபூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து நான்காம் காலயாக பூஜை, கலச புறப்பாடு நடைபெற்றது. இதில் இராஜ கோபுரவினாயகர், கம்பத்து இளையயனார் முருகன் சன்னதி உட்பட 86 பரிவார மூர்த்திகளுக்கு 09.45 மணியளவில் கும்பாபிசேகம் நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கனக்கானபக்தர்கள் கலந்துகொண்டனர்.
06.02.2017 அன்றுகாலை 09.05 மணிமுதல் 10.00 மணிக்குள் இராஜ கோபுரம் உட்பட 9 கோபுரங்கள் அருணாச்சலேஸ்வரர், உண்ணாமலையம்மன் சன்னதி உட்பட 59 சன்னதிகளில் மகாகும்பாபிசேகம் மிகச் சிறப்பாக நடைபெற இருக்கின்றது. பக்தர்கள் அனைவரும் அன்று நடைபெறும் மகா கும்பாபிசேகத்தில் கலந்துகொண்டு எம்பெருமானின் அருளிளை பெற்றுக் கொள்ளுமாறு அடியேனின் விருப்பத்தை இங்குபதிவுசெய்கிறேன்.
வாழ்கவளமுடன்………..
7/497 ‘டி’ பிரிவு, சிட்கோநகர்
வில்லிவாக்கம் சென்னை-600 049.
Phone : 9962040695
ponpuni2002@gmail.com